உலகெங்கும் வாழும் மக்கள் இதங்களை வென்ற மனிதநேயமான நீதிபதியாக அறியப்படும் அமெரிக்காவின் மரியாதைக்குரிய நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்.
கணையப் புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடி வந்த அவர், நேற்று (20) தனது 88 ஆவது வயதில் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் ரோட் தீவு மாநிலத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய அவர், விசாரணைகளில் அன்பு மற்றும் கருணைக்காக உலகம் முழுவதும் பேசப்பட்டார்.
நீதிபதி பிராங்க் கேப்ரியோ தனது மனிதாபிமான தீர்ப்புகளுக்காகவும், தனக்கென தனித்துவமான நீதி செயல்முறையை அறிமுகப்படுத்தியதற்காகவும் மக்கள் மத்தியில் நன்கு அறியப்படும் ஒருவராவார்.
மனித நேயமிக்க அவரது புரிதலையும் முன்னணியில் கொண்டு வந்த அவரது தனித்துவமான தீர்ப்பளிக்கும் முறையால் மில்லியன் கணக்கான மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
அவர் ஒரு மரியாதைக்குரிய நீதிபதியாக மட்டுமல்லாமல், அன்பான கணவர், தந்தை, தாத்தா, கொள்ளு தாத்தா மற்றும் நண்பராகவும் நினைவுகூரப்படுகிறார்.
அவரது வாழ்க்கையும் பணியும் எண்ணற்ற கருணை மற்றும் இரக்கச் செயல்களுக்கு உத்வேகம் அளிப்பதுடன், அவை இப்போது மறக்க முடியாத மரபாக அமைகின்றன.
அவர் தனது தீர்ப்புகளை சமூக ஊடகங்களிலும் ஒளிபரப்பினார், மேலும் தனது சொந்த யூடியூப் சேனல் மூலம் அவற்றைப் பகிரங்கப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.